செண்பகாரண்ய சேத்திரம், சுத்தவல்லி வளநாடு, ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம், குலோத்துங்க சோழ விண்ணகரம், ராஜேந்திர சோழ விண்ணகரம், வாசுதேவபுரி, தட்சிணதுவாரகா, வண்டுவராபதி, சுயம்புத்தலம், மன்னவர்குடி, ராஜமன்னார்குடி, மன்னார்குடி என வரலாற்று ஆய்வாளர்களும், வைணவ பெரியோர்களும் பல பெயர்களையும் அதன் வரலாறுகளையும் கூறினாலும் எங்களுக்கு, இத்தலைமுறைக்கு இது "மன்னை " தான். இந்த மன்னையின் வரலாற்றை, பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, தொழில் வணிகத்தை, உழவை, கலையை, நிலவியலை என அனைத்தையும் வரும் காலத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் "மன்னையின் மைந்தர்கள்" அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஓர் எளிய முயற்சி தான் "மன்னை சுவடுகள்". மன்னார்குடி நகராட்சியாக அறிவிக்கப்பட்டு 154 வருடங்கள் கடந்ததையொட்டி "மன்னை 154" என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற வரலாற்று தரவுகளின் படி மன்னையின் தொன்மையை தேடினால் நமக்கு கிடைக்கப்பெறுவது, கிபி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த "பௌத்த துறவி புத்தத்தர்" அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. அவர் மன்னைக்குட்பட்ட பூதமங்கலம் என்ற பகுதியில் " வேணுதாசர்" என்பவரால் கட்டப் பெற்ற பௌத்த விகாரத்தில் தங்கி எழுதிய குறிப்புகளிலிருந்து மன்னையை பற்றி அறிய முடிகிறது.
மேலும் "புத்ததத்தர்" இங்கு தங்கியிருந்த பொழுது 'வினய வினிச்சயம்' எனும் நூலையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் இங்கு பௌத்த மதத்தை பின்பற்றியோர் அதிகமாக வாழ்ந்தது இவரது குறிப்புகளின் வழி அறிய முடிகிறது. அவரின் குறிப்புகளின் வழி அக்காலத்திலேயே கல்வியில் கலையில் மக்கள் முன்னேறி இருந்தது தெரிய முடிகிறது. இதன்வழி பார்த்தால் இந்த முன்னேறிய வாழ்க்கை முறைக்கு வருவதற்கு முன்னான பலஆயிரம் ஆண்டு நாகரிக தொடர்ச்சி மன்னைக்கு இருக்கும் என்பது புலனாகிறது.
கிபி 7ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் இயற்றப் பெற்ற தேவார பதிகத்தில் பாமணி ஆற்றை பற்றிய குறிப்புகளும் ஆற்றங்கரையில் உள்ள பாமணி சிவன் கோயிலைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இக்காலகட்டத்தில் சமணத்தை சார்ந்தவர்களும், சைவத்தை சார்ந்தவர்களும் பெருவாரியாக மன்னையில் வாழ்ந்ததும் தெரியவருகிறது. அக்கால சோழ பேரரசுகளும் சமணத்தையும் சைவத்தையும் ஒருங்கே வளர்த்துள்ளனர். மன்னையின் அடையாளமான "இராஜகோபால சுவாமி " திருக்கோவிலும் சோழர்காலத்திற்கு முன்பு சமண கோவிலாக இருந்திருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதனை உறுதிப்படுத்தும் தரவுகள் ஏதும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
கிபி 9ம் நூற்றாண்டில் சுந்தரசோழரின் கல்வெட்டுகளிலிருந்து, மன்னைக்குட்பட்ட
"பள்ளக்கோவில்" எனுமிடத்தில் சமண பள்ளி இருந்ததும் அதனை சுந்தரசோழன் பராமரிப்பு பணியை மேற்கொண்டதால் அதனை "சுந்தரசோழப்பெரும்பள்ளி " என அழைத்ததாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மன்னார்குடி மதிலழகு" என்ற முதுமொழிக்கு காரணம் மன்னை ராஜகோபால சுவாமி திருக்கோவில் ஆகும். மன்னை என்றாலே அனைவருக்குள்ளும் நினைவிற்கு வரும் முதல் விடயம் இக்கோவில் தான். கிபி 10ம் நூற்றாண்டில் "இராஜேந்திர சோழனின்" ஆட்சிக்காலத்தில் அவரது மகன் " முதலாம் ராஜாதிராஜ சோழன்" இக்கோவிலை கட்ட ஆரம்பித்து அதற்கான நிதி வசூல் செய்யப்பட்ட விவரம் "முதலாம் இராஜாதிராஜ சோழனின்" கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. கிபி 1018ம் ஆண்டு தற்பொழுதுள்ள கோவிலின் முன்னுள்ள மாமரத்தடியில் மன்னையில் உள்ள காடு, நாடு, ஊர் மற்றும் கோட்டையை சார்ந்த மக்கள் கூடி கோவில் கட்ட நிதி அளித்ததாக அக்கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது. இந்த காடு, நாடு, ஊர் மற்றும் கோட்டை என்பது தான் தற்பொழுது நம் மன்னையை சுற்றியுள்ள இடப்பெயர்களில் தொக்கியுள்ளது (உதாரணமாக :- பைங்காநாடு, குடிக்காடு, பேரையூர், நெடுவாக்கோட்டை).
"முதலாம் இராஜாதிராஜ சோழனின்" முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட கோயில் பணி "முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில்" முடிவுற்றது. இதன் பிறகு ஆட்சிக்கு வந்த நாயக்கர்கள் இக்கோயிலை தங்களுடைய குலதெய்வ கோயிலாக வணங்க ஆரம்பித்து இந்தக்கோயிலை மேலும் விரிவுப்படுத்தினார்கள். அடுத்து வந்த மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் கோயிலை முறையாக பராமரித்து வந்துள்ளார்கள். மேலும் பல கோயில்கள் திரும்பிய பக்கமெல்லாம் இருப்பது ஊருக்கு தனிச்சிறப்பாகும்.
"கோயில்பாதி குளம் பாதி கொண்ட மன்னார்குடி " எனும் முதுமொழிக்கு ஏற்ப சுமார் 100க்கும் மேற்பட்ட குளங்கள் மன்னையில் இருந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குளங்களில் ஒன்றான, சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட "ஹரித்ரா நதி" குளமும் மன்னையில் தான் உள்ளது. இதன்மூலம் நீர்மேலாண்மை பற்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமே போதுமான அறிவும் விழிப்புணர்வும் கொண்ட மேலான சமூகமாக மக்கள் விளங்கியதை அறிந்துகொள்ள முடிகிறது. இன்று நம்மை நாமே இவ்விடயத்தில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேற்சொன்ன முதுமொழியை இன்று மெய்ப்பிற்கும் வகையில் அந்நீர்நிலைகளை புதுப்பிக்கவும் சீர்செய்யவும் வேண்டியதன் அவசியத்தை நாம் இந்த நேரத்தில் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
மன்னராட்சிக்கு பிறகான ஆங்கிலேயராட்சியில் 1886 ஆம் ஆண்டு " பிரிட்டிஷ் ராஜ்" சட்டம் மூலம் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை நகராட்சிகளாக அறிவித்தது. அவ்வாறு அறிவித்த நகராட்சிகளில் ஒன்று மன்னார்குடி நகராட்சி. தற்பொழுது 154 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் மன்னார்குடி நகராட்சியை நினைவுகூரும் வகையில் தான் இந்த "மன்னை 154" நிகழ்வை " மன்னையின் மைந்தர்கள் " அமைப்பு முன்னெடுத்துள்ளது.
கோயில் குளம் மட்டுமின்றி கல்வி கலை என இதர அறிவார்ந்த விடயங்களிலும் மன்னார்குடி தனி வரலாறு கொண்டுள்ளது. இங்கு சுமார் 170 ஆண்டு பழமையான பின்லே பள்ளியும், 130 ஆண்டுகள் பழமையான தேசிய மேல்நிலை பள்ளியும் உள்ளது. இதன்மூலம் இங்குள்ள மக்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னமே கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது. அதனால் தான் இன்று சுமார் 95 சதவிகித கல்வி வளர்ச்சியை எட்டிய ஊராக மன்னை இருக்கிறது. அதேபோல் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கியர்களை உருவாக்கிய பெருமையும் மன்னைக்கு உள்ளது. குறிப்பாக இசை, நாடகம், கட்டிடக்கலை என.
இன்னும் பல்வேறு சீரிய வரலாறையும் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ள மன்னையை நாம் முழுவதுமாக அறிந்து நாம் இழந்தவற்றை மீளுருவாக்கம் செய்ய இந்த "மன்னை 154" நிகழ்வு ஓர் திறவுகோலாக இருக்கட்டும் !!
வாழ்க எம் மன்னை!!!